அனந்தநாக், ஜுன் 18- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம் அசபல் என்ற இடத்தில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவ வீரர்கள் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதல் தொடுத்தனர். பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், கேதன் சர்மா என்ற ராணுவ மேஜர் பலியானார். மேலும் ஒரு ராணுவ மேஜர் மற்றும் இரு வீரர்கள் படுகாயடைந்தனர். இதையடுத்து ராணுவத்தினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்து தேடியபோது, ஒரு வீட்டுக்குள் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இறுதியில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் வீட்டுக்குள் இருந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.